
ஈப்போ, செப்டம்பர்-10,பேராக்கில், வாகனங்களின் உரிமத்தை போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக மாற்றம் செய்த வழக்கில், சாலைப் போக்குவரத்து இலாகாவான JPJ அதிகாரிகள் அறுவர் மற்றும் இடைத்தரகர்கள் ஐவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் விண்ணப்பத்தை ஏற்ற ஈப்போ குற்றவியல் நீதிமன்றம், 4 பெண்கள் உட்பட கைதுச் செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களையும் அடுத்தத் திங்கட்கிழமை வரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
வாகன உரிமங்களை மாற்றுவதற்காகப் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு உதவும் வகையில் இவர்கள் கைதாகியுள்ளனர்.
இச்சம்பவம், 2009-ஆம் MACC சட்டத்தின் கீழ், போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததற்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த முறைகேட்டில் வேறு நபர்களுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.



