
பினாங்கு, அக்டோபர் 15 – பினாங்கு, கெலுகோர் (Gelugor) பகுதியிலுள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழகமான USM இல் , 21 வயது மாணவி ஒருவர் இன்று காலை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் விடுதிக் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்திருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகிறது.
தீமோர் லாவுட் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அப்துல் ரொசாக் முகம்மட் (Abdul Rozak Muhammad) கூறுகையில், காலை 7.25 மணியளவில் விடுதியின் கீழ்தளத்திலுள்ள கான்கிரீட் தரையில் மாணவி குப்புற கிடந்ததைத் துப்புரவுப் பணியாளர் ஒருவர் கண்டதாகத் தெரிவித்தார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பல்கலைக்கழக நிர்வாகம் காலை 8.40 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தது. முதற்கட்ட விசாரணையில், சந்தேகத்திற்கிடமான குற்றச்செயலுக்கான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், உயரத்திலிருந்து விழுந்ததால் ஏற்பட்டிருக்கக்கூடிய வெளிப்புறக் காயங்கள் மாணவியின் உடலில் காணப்பட்டன.
மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் திடீர் மரணமாகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.



