
கோலாலம்பூர், செப்டம்பர்-20,முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் லங்காக் டூத்தா இல்லத்திற்கு வெளியே நாளை காலை 7 மணி முதல் நடமாடும் போலீஸ் நிலையம் ஒன்று நிறுவப்படவுள்ளது.
காஜாங் சிறையிலிருந்து நஜீப் வீட்டுக் காவலுக்கு மாற்றப்படும் வேளையில், ஊடகவியலாளர்கள், பொது மக்கள் மற்றும் ஆதரவாளர்களின் வருகையைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செந்தூல் மாவட்டப் போலீஸ் தலைவர் ACP அனுவார் பக்ரி அப்துல் சலாம் தெரிவித்தார்.
இந்நடவடிக்கை 24 மணி நேரப் பாதுகாப்புப் பணிக்கானது அல்ல என்றும், நஜீப்பின் வீட்டுக் காவல் கண்காணிப்பு விவகாரங்கள் மலேசியச் சிறைத் துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
SRC International வழக்கின் எஞ்சிய சிறைத் தண்டனையை 2028 ஆகஸ்ட் 23 வரை வீட்டுக் காவலில் அனுபவிக்க நஜீப்புக்கு அண்மையில் நிபந்தனை மன்னிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
50 மில்லியன் அபராதத் தொகையைச் செலுத்தும் பட்சத்தில் எந்நேரத்திலும் அவர் வீட்டுக் காவலுக்கு மாற்றப்படலாம்.



