அலோர் காஜா, ஜூன் 19 – கட்டுப்படுத்தப்பட்ட பொருள்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள Ron 95 பெட்ரோலை அண்டை நாட்டின் எண் பதிவைக் கொண்ட வாகனத்திற்கு விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் எண்ணெய் நிலைய உரிமையாளர் ஒருவருக்கு எதிரான விசாரணையை உள்நாட்டு வாணிக மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் மலாக்கா கிளை தொடங்கியுள்ளது. மலாக்கா மஸ்ஜித் தானாவிலுள்ள ( Masjid Tanah ) எண்ணெய் நிலையத்தில் உதவித் தொகையை பெற்ற பெட்ரோலை அண்டை நாட்டைச் சேர்ந்த Toyota Prius வாகனத்தில் வெளிநாட்டு ஆடவர் என நம்பப்படும் 30 வயதுடைய ஒருவர் பெட்ரோல் நிரப்பும் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மலாக்கா உள்நாட்டு வாணிக மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் இயக்குநர் (நொரினா ஜபார் ) Norena Jaafar தெரிவித்தார்.
அந்த பெட்ரோல் நிலையத்தில் பல முறை சுற்றிய பின் மாலை மணி 4.35 அளவில் ரோன் 95 பெட்ரோல் நிரப்பியதற்காக OPT மூலம் அந்த நபர் 23 ரிங்கிட் 17 சென் கட்டணம் செலுத்தியிருக்கும் தகவலையும் அவர் வெளியிட்டார். வெளிநாடுகளின் எண் பதிவைக் கொண்ட மோட்டார் சைக்கிள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் ரோன் 95 பெட்ரோல் விற்கக்கூடாது என்ற தடை குறித்த சுற்றறிக்கை கடந்த 2022 ஆண்டு ஜூன் 17ஆம் தேதி பெட்ரோல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட எண்ணெய் நிலையத்தின் உரிமையாளர் 1974ஆம் ஆண்டின் கட்டுப்படுத்த பொருட்களின் விதிமுறையின் 12 A விதிமுறையை மீறியிருப்பதால் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என்பதோடு அவருக்கு ஒரு மில்லியன் ரிங்கிட்டிற்கும் மேற்போகாத அபராதம் அல்லது மூன்று ஆண்டுக்கும் மேற்போகாத சிறை அல்லது அவையிரண்டும் விதிக்கப்படலாம் என நொரினா தெரிவித்தார்.