
கோத்தா கினாபாலு, அக்டோபர்-3,நிரந்தரப் பணியிடங்களைப் பெற்ற பின்னர், சபா மருத்துவமனைகளில் பணியாற்றிய குறைந்தது 217 மருத்துவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சபா சுகாதாரத் துறையின் தரவுகளின்படி, Queen Elizabeth மருத்துவமனையில் 45 பேரும், சபா பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 42 பேரும், சண்டாக்கான் Duchess of Kent மருத்துவமனையில் 31 பேரும் பணியிலிருந்து வெளியேறியுள்ளனர்.
ஏற்கனவே மருத்துவர்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கும் சபா மற்றும் சரவாக்கில், புதிய பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்ட சில மருத்துவர்கள் பணிக்குச் செல்லாததும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
சபாவில் பணியாற்றும் சில மருத்துவர்கள், ஆள்பற்றாக்குறை காரணமாக மாதத்திற்கு 10 முறை அல்லது அதற்கும் அதிகமாக ‘On-Call’ பணியில் ஈடுபட வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தொலைதூரப் பகுதிகளில் உள்ள வசதிக் குறைபாடு, குடும்ப சூழ்நிலை, வாழ்க்கைச் செலவு மற்றும் மேற்படிப்பு, தொழில் முன்னேற்றம் தொடர்பான நிச்சயமற்ற தன்மை ஆகியவை சபா, சரவாக் பணியிடங்களை சில மருத்துவர்கள் ஏற்காததற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன.



