
மலாக்கா, அக்டோபர்-1,மலாக்கா, தாமான் ஆயர் மோலேக்கில் இரண்டு சிறுவர்களை அடுத்தடுத்து கடத்த முயன்ற 36 வயது நபர் ஒருவரை போலீஸார் கைது செய்து, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
கஞ்சா போதையில் இருந்த அந்நபர், இரவு 8 மணியளவில் ஆடைகளின்றி வீட்டின் முன் நின்றிருந்த கார் ஒன்றுக்குள் திடீரென நுழைந்ததாக,மலாக்கா தெங்கா மாவட்டப் போலீஸ் தலைவர் ஹாலிம் அபாஸ் தெரிவித்தார்.
காரில் இருந்த தனது 10 வயது மகனை உடனடியாகக் கீழே இறங்கும்படி கூச்சலிட்டு எச்சரித்த தந்தை, அந்த நபரை காரிலிருந்து வெளியே இழுத்துப் போட்டார்; எனினும் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே, அருகிலுள்ள பகுதியில் தனது இரண்டு வயது பெண் குழந்தையுடன் சென்றுகொண்டிருந்த தம்பதியரை வழிமறித்த அந்நபர், கைப்பேசியைப் பறிக்க முயன்றதுடன் அந்தக் குழந்தையையும் வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்துள்ளார்.
குழந்தையின் தந்தை அவருடன் போராட, சத்தம் கேட்டு ஓடிவந்த பொது மக்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அந்த நபருக்கு ஏற்கெனவே சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல் குற்றப் பின்னணி இருப்பதும், இதற்கு முன்பாக சீலாட் ஆசிரியர் ஒருவரை பாட்டிலால் தாக்கியதும் தெரியவந்துள்ளது.



