
கோலாலம்பூர், செப்டம்பர்-10 – STPM உள்ளிட்ட அரசாங்கப் பொதுத் தேர்வுகளில் மிகச் சிறந்த தேர்ச்சிப் பெற்றிருந்தும், மேற்கல்விப் பயில மாணவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற மற்றும் அவர்கள் விரும்பும் துறைகள் கிடைக்காமல் போகும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
இப்பிரச்னைக்கு என்று தான் தீர்வுப் பிறக்குமோ என, ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ Dr நெல்சன் ரெங்கநாதன் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்து வேறு துறைகள் கிடைத்ததாகக் கூறி ஏராளமான மாணவர்களிடமிருந்து ம.இ.கா புகார்களைப் பெற்று வருகிறது.
குடும்பச் சூழலை உணர்ந்து கஷ்டப்பட்டு படித்து மிகச் சிறந்தத் தேர்ச்சியைப் பெற்ற மாணவர்களுக்கு இந்த அவலம் ஏற்படுவது வேதனைக்குரியது.
ஏழை இந்திய மாணவர்கள் பெரிது நம்பியிருப்பது அரசாங்கப் பல்கலைக் கழகங்களைத் தான்; பணமிருந்தால் தனியார் கல்வி நிறுவனங்களுக்குப் போகலாம்; இல்லாத மாணவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களால் 500,000 ரிங்கிட் வரை கட்டி படிக்க முடியுமா என நெல்சன் வினவியுள்ளார்.
ம.இ.காவின் ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம், ம.சீ.சவின் UTAR பல்கலைக் கழகம் போன்றவையும் எவ்வளவுதான் தனித்தே செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார்.
மிகச் சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் முதன்மைப் பட்டப்படிப்புத் தேர்வை அங்கீகரிப்பதில் அப்படி என்னதான் பிரச்னை என, ம.இ.கா தேசியக் கல்விக் குழுத் தலைவருமான அவர் கேள்வி எழுப்பினார்.
ஆண்டுதோறும் இப்பிரச்னைக்கு ம.இ.கா குரல் கொடுத்து வருகிறது; ஆனால் ஒரு ஆக்ககரமான தீர்வில்லாமல் இப்பிரச்னைத் தொடருவது ஏமாற்றமளிக்கிறது.
எனவே, மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு மடானி அரசாங்கம் இப்பிரச்னைக்கு உரிய தீர்வை வழங்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
STPM தேர்வில் 4.0 CGPA புள்ளிகளைப் பெற்ற மாணவர் ஒருவருக்கு மலாயாப் பல்கலைக்கழகத்தில் தான் விரும்பிய கணக்கியல் துறையில் பட்டப்படிப்பு மேற்கொள்ள UPU வழியாக விண்ணப்பித்தும், அது கிடைக்காமல் அவரின் ஐந்தாவது தேர்வான நிர்வாகத் துறை வழங்கப்பட்டது குறித்து ம.சீ.சா முன்னதாக கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.