
ஹட்யாய், மே-5-தாய்லாந்தின் ஹட்யாய் நகரில், போக்குவரத்து விதிமீறலுக்காகக் காரின் டயர் பூட்டப்பட்ட நிலையில், அந்தப் பூட்டை உடைத்துக் கொண்டு தப்பியோடிய மலேசிய ஓட்டுநர் ஒருவரைத் தாய்லாந்து போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நேற்று காலை ஹட்யாயில் உள்ள ‘No Parking’ பகுதியில் மலேசியப் பதிவுப் பெற்ற Mercedes-Benz கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
இதனைக்கண்ட போக்குவரத்துப் போலீஸார் அந்தக் காரின் டயரில் பூட்டு (wheel clamp) போட்டுச் சென்றனர்.
ஆனால், காலை 10.30 மணியளவில் போலீஸார் மீண்டும் அங்கு வந்தபோது, கார் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அங்கிருந்த CCTV கேமராவைப் போட்டுப் பார்த்ததில், அந்த ஓட்டுநர் காரை மிக வேகமாக பின்னோக்கிச் செலுத்தி, வலுக்கட்டாயமாக அந்தப் பூட்டை உடைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியது தெரியவந்தது.
இது குறித்துப் பேசிய ஹட்யாய் போலீஸ், “அரசு சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதும், அரசு ஊழியரின் கடமைக்குத் தடையாக இருப்பதும் கடுமையான குற்றமாகும்” எனத் தெரிவித்தார்.
தற்போது அந்நபரின் கார் பதிவு எண் அனைத்து எல்லைச் சாவடிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அவர் மீண்டும் மலேசியவுக்குள் நுழைவதைத் தடுக்க குடிநுழைவுத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த ஓட்டுநருக்கு 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது.



