
பூச்சோங், ஆகஸ்ட் 8 – பொதுமக்கள் குறிப்பாக பி40 பிரிவினர் தங்களது உடல்நலத்தை முறையாகப் பரிசோதித்துக் கொள்ளும் வகையில் ‘தொண்டன்’ இயக்கம் இலவச சுகாதார முகாமை ஏற்பாடு செய்தது.
பூச்சோங் 14-ஆவது மைல் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமில் பல், வாய் மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் பெண்களுக்கான சிறப்பு பரிசோதனைகள் மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
‘தொண்டன்’ தலைவர் டாக்டர் கலையரசு செல்வராஜன் கூறுகையில், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவது முகாமின் முக்கிய நோக்கம் என்றார்.
இதனிடையே, ரவாங் புக்கிட் பெருந்தோங்கிலுள்ள யாயாசான் செரிபு ஹராப்பான் மலேசியா (Yayasan Seribu Harapan Malaysia di Bukit Beruntung, Rawang) இல்லத்தைச் சேர்ந்த 20 குழந்தைகளுக்கும் சுகாதாரப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



