Latestமலேசியா

நேப்பாள வெள்ளம்: காணாமல் போன 55 மலேசியர்களின் குடும்பத்தினருக்கு விஸ்மா புத்ராவில் சிறப்பு விளக்கக் கூட்டம்

புத்ராஜெயா, செப்டம்பர்-27,நேப்பாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய பெரு வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போன 55 மலேசியர்களின் தற்போதைய நிலவரத்தை விளக்குவதற்காக, அவர்களது குடும்பத்தினருடனான சிறப்பு சந்திப்புக் கூட்டம் இன்று புத்ராஜெயாவில் உள்ள வெளியுறவு அமைச்சின் கட்டடமான விஸ்மா புத்ராவில் நடைபெற்றது.

ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேப்பாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 1,450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மேலும் ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர்.

இதையடுத்து, ஆகஸ்ட் 30-ஆம் தேதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் அரசாங்கம் தனது முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பை நடத்தியது.

அப்போது, நேப்பாளத்தில் மீட்கப்படும் உடல்களை அடையாளம் காணும் நோக்கில் உறவினர்களிடமிருந்து மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இரகசிய விளக்கமும் அளிக்கப்பட்டது.

தற்போது பேரிடர் நிகழ்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியுள்ள சூழலில், தீவிர தேடுதல் முயற்சிகள், தகவல் சரிபார்ப்பு மற்றும் உடல்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் குறித்து இன்று குடும்பத்தினருக்கு விரிவாக விளக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் NADMA, SMART மீட்புக் குழு, அரச மலேசிய போலீஸ் படை, இரசாயணத் துறை மற்றும் தேசியப் பதிவிலாகா ஆகியவற்றின் உயர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேப்பாளத்திற்கு அனுப்பப்பட்ட 11 பேர் கொண்ட SMART மீட்புக் குழு, தரைவழித் தேடுதல் மற்றும் ட்ரோன் கண்காணிப்பு பணிகளை முடித்து நாடு திரும்பியது.

இந்நிலையில் மாயமான 55 மலேசியர்களின் நிலையை உறுதிப்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!