கோலாலம்பூர்,, ஜூன்-11 – சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் ஃபிர்டாவுஸ் வோங் (Firdaus Wong) பல்வேறு குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டும் என வழக்கறிஞர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆகக் கடைசியாக, சிறார்களை மதமாற்றம் செய்வதற்கு அவர் ஆலோசனை வழங்கும் வீடியோ வைரலாகியிருக்கிறது.
எனவே, மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக அவர் மீது பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் புகார் செய்ய வேண்டும் என்றும், போலீஸ் அவரைக் கைதுச் செய்து விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் வலியுறுத்தினார்.
ஊரார் குழந்தைகளை மதமாற்றம் செய்ய நீங்கள் யார் என, இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கேள்வி எழுப்பினார்.
இவ்வேளையில், ஃபிர்டாவுஸ் விஷயத்தில் அரசாங்கம் வாய் மூடி மௌனியாக இருப்பது ஏன் என வழக்கறிஞர் சச்பிரீத்ராஜ் சிங் சொஹன்பால் (Sachpreetraj Singh Sohanpal) கேட்டார்.
3R எனப்படும் இனம்-மதம்-ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிமுக்கியத்துவம் காட்டும் மடானி அரசாங்கம், இந்த ஃபிர்டாவுஸ் விஷயத்தில் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்றார் அவர்.
அச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து 11 நாட்கள் ஆகியும், பல்வேறு அறிக்கைகள் விடப்பட்டும், இதுவரை கல்வி அமைச்சோ, போலீசோ, சட்டத் துறையோ வாய்த் திறக்கவில்லை என, உலக மனித உரிமை சம்மேளனத்தின் தலைவர் எஸ். சஷிகுமார் கூறினார்.
ஃபிர்டாவுஸ் வோங், அரசாங்கப் பள்ளிகளுக்குள் நுழைவது தடை செய்யப்பட்டால், முஸ்லீம் அல்தாத பெற்றோர்கள் நிம்மதியடைவர் என மலேசிய இந்து சங்க பேச்சாளர் அருண் துரைசாமி கேட்டுக் கொண்டார்.