Latestமலேசியா

அக்டோபரை ‘வாசிப்பு மாதமாக’ அறிவிக்க தேசிய ஒற்றுமை அமைச்சு முன்மொழிவு

கோலாலம்பூர், செப்-29-ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தை ‘வாசிப்பு மாதமாக’ அறிவித்து, கட்டமைக்கப்பட்ட வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்க தேசிய ஒற்றுமை அமைச்சு முன்மொழிந்துள்ளது. அம்முயற்சி, 2030 ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை வாசிக்கும் சமூகமாக மாற்றும் ‘தேசிய வாசிப்பு தசாப்தம்’ திட்டத்திற்கு வலுசேர்க்கும் என தேசிய ஒற்றுமை அமைச்சர் Datuk Aaron Ago Dagang தெரிவித்தார்.

தேசிய நூலகம் வாசிப்புப் பண்பாட்டை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக இளைஞர்களை ஈர்க்கும் வகையில் book cafe, வாசிப்பு மன்றங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். அதோடு சமூக ஊடக உள்ளடக்க உருவாக்குநர்களை உட்படுத்திய ஆக்கப்பூர்வமான பிரசாரங்களையும் மேற்கொள்ளலாம் என அவர் கூறினார்.

செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவரப்படி, 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு குறியீடு முதற்கட்ட ஆய்வில் 6,649 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 95 விழுக்காட்டினர் தீவிர வாசிப்பாளர்கள். 47.8 விழுக்காட்டினர் தினமும் வாசிப்பதாக Aaron குறிப்பிட்டார்.

மேலும், நெதர்லாந்து மற்றும் ரஷ்யாவுக்கான முயற்சிகள் மூலம் 64 மலாய் கையெழுத்துப் பிரதிகள் ஆவணப்படுத்தப்பட்டு, 465,000 ரிங்கிட் மதிப்பிலான அவற்றின் டிஜிட்டல் பிரதிகள் பெறப்பட்டுள்ளன.

இதனிடையே, 506 கிராமப்புற நூலகங்களில் KOHA ஒருங்கிணைந்த நூலக அமைப்பை செயல்படுத்துதல், Polaris அமைப்புக்கு மாற்றம், AI அடிப்படையிலான பட்டியலிடும் கருவி உருவாக்கம், தேசியப் பொக்கிஷங்களை டிஜிட்டல் மயமாக்குதல் உள்ளிட்ட ஐந்து முக்கிய டிஜிட்டல் மாற்றங்களை தேசிய நூலகம் மேற்கொண்டுள்ளது.

அத்துடன், 21.6 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் பேராக்கில் Bagan Datuk டிஜிட்டல் நூலகத்தையும், 62.915 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் புக்கிட் ஜாலிலில் தேசிய அறிவுசார் பாரம்பரிய மையம் (MyWIN) அமைக்கும் திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது. வாசிப்புப் பண்பாட்டை வலுப்படுத்தவும், அறிவுக்கான அணுகலை விரிவுபடுத்தவும், சமூக ஒற்றுமையை வளர்க்கவும் தேசிய நூலகத்துக்கு அமைச்சு தொடர்ந்து ஆதரவளிக்கும் என Aaron உறுதியளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!