கோலாலம்பூர், ஜூலை 9 – அங்கீகரிக்கப்படாத வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கு வங்கிகளே முழுப் பொறுப்பை ஏற்க வேண்டுமே தவிர , மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மீது குறைகூறுவது அல்லது அவர்கள் மீது சுமையை ஏற்படுத்தக் கூடாது என நிதித்துறை துணையமைச்சர் லிம் ஹுய் யிங் ( Lim Hui Ying ) தெரிவித்திருக்கிறார்.
வாடிக்கையாளர் தனது தனிப்பட்ட பாதுகாப்பு விவரங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லாவிட்டால், ஆன்லைன் வங்கி மோசடியால் ஏற்படும் இழப்புகளுக்கு வாடிக்கையாளர்களைக் குறை கூறக்கூடாது என்று லிம் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு மோசடி வழக்கும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். வங்கியின் முறையில் நிர்வாக நடைமுறைகளில் உள்ள பலவீனங்களால் வாடிக்கையாளருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அது தொடர்பான இழப்பு அல்லது மோசடியின் இழப்பை வங்கி ஏற்க வேண்டும் என்று இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், வாடிக்கையாளரின் அலட்சியம் பாதுகாப்பு விவரங்களை சமரசம் செய்ததற்கான தெளிவான சான்றுகள் இருந்தால், வழக்கு விவரங்களின் அடிப்படையில் உரிய இழப்பீட்டை வங்கி பரிசீலிக்க வேண்டும். முடிவுகள் அல்லது இழப்பீடு தொடர்பான சர்ச்சைகளை நிதி சேவைகளுக்கான Ombudsman எனப்படும் குறைதீர்ப்பாளரிடம் (OFS) எடுத்துச் செல்லலாம் என்று லிம் கூறினார்.