மும்பை, நவம்பர்-28, அசைவம் சாப்பிட காதலன் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததால் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படும் ஏர் இந்தியாவின் பெண் விமானி, மும்பையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 வயது சிருஷ்டி துலி (Srishti Tuli) திங்கட்கிழமை தனது வாடகை வீட்டில் தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்தார்.
இதையடுத்து குடும்பத்தார் செய்த போலீஸ் புகாரின் பேரில் ஆதித்யா பண்டிட் எனும் 27 வயது காதலன் கைதுச் செய்யப்பட்டார்.
விமானியாகப் பயிற்சிப் பெற்ற போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
ஆனால் சுத்த சைவமான ஆதித்யாவுக்கு, சிருஷ்டி அசைவம் சாப்பிடுவது பிடிக்கவில்லை.
இதனால் அசைவ உணவை சாப்பிடக் கூடாது எனக் கூறி காதலியைக் கட்டாயப்படுத்தி வந்ததோடு, அடிக்கடி துன்புறுத்தியும் வந்துள்ளார்.
சில சமயம் பொது வெளியென்றும் பாராமல் சிருஷ்டியை ஆதித்யா அவமானப்படுத்தியதாக, அவரின் மாமா தனது போலீஸ் புகாரில் கூறியுள்ளார்.
தற்கொலைக்கான காரணம் குறித்து சிருஷ்டி கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை;
என்றாலும் கடைசியாக ஆதித்யாவின் கைப்பேசிக்கு அழைத்து உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக அவர் கூறியுள்ளார்.
சம்பவத்திற்கு முதல் நாளும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், தற்கொலைக்குத் தூண்டிய சந்தேகத்தின் பேரில் ஆதித்யா தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.