
அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி வந்த கும்பல் கைது: RM3 மில்லியன் இழப்பு
கோலாலம்பூர், பிப்ரவரி-11,
அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டிப் பணம் பறித்து, இதுவரை RM3 மில்லியனுக்கும் மேல் இழப்பை ஏற்படுத்திய கும்பலொன்று ஜோகூரில் பிடிபட்டுள்ளது.
18 முதல் 33 வயதுடைய 6 பேர் கைதானதாக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
எனினும் கும்பலின் தலைவனான 23 வயது மலேசியர், இன்னமும் தலைமறைவாக உள்ளான்.
இந்த கும்பல் சமூக ஊடகங்களில் பெண்களாக நடித்து, பாதிக்கப்பட்டவர்களை சந்தேகத்திற்குரிய _link_ இணைப்புகளை கிளிக் செய்ய தூண்டுகிறது.
பின்னர் அவர்களின் கைப்பேசிகளை _hack_ செய்து, அந்தரங்க வீடியோக்களை பதிவுச் செய்து, மிரட்டிப் பணம் பறிக்கிறது.
இவ்வேளையில், மலேசியர்கள் லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்கு மனிதக் கடத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, மோசடி கும்பலில் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வற்புறுத்தப்பட்டதும், அடக்குமுறைகளுக்கு உள்ளானதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வேலையை விட்டு வெளியேற வேண்டுமென்றால் RM30,000 கொடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுவதாக போலீஸார் கூறினர்.
கைதான அறுவருக்குமே மனிதக் கடத்தலில் ஈடுபட்டது, குழந்தை ஆபாசப்படங்களை தயாரித்தது, கும்பலாக கொள்ளையடித்தது போன்ற குற்றப் பதிவுகள் உள்ளன.
நாளை அவர்கள் ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளனர்.
சந்தேகமான link இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



