கோலாலம்பூர், ஜூன் 20 – அனுமதி இன்றி மருத்துவ தகவலை வெளியிட்ட, கோலாலம்பூரிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு எதிராக பிரிட்டன் பெண் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.
குறிப்பாக, தனது மகனின் இயலாமைக்கு வழிவகுத்ததாக கூறப்படும் தனது தவறுக்காக, தனி அலட்சிய வழக்கில், தனக்கு எதிராக பயன்படுத்த சம்பந்தப்பட்ட மருத்துவமனை அந்த தகவலை வெளியிட்டதாக அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
அதனால், கிறிஸ்டின் லீஸ் (Christine Lees) எனும் அப்பெண், தலைநகரிலுள்ள, பிரின்ஸ் கோர்ட் (Prince Court) தனியார் மருத்துவமனையிலிருந்து, 30 லட்சம் ரிங்கிட் இழப்பீட்டை கோரியுள்ளார்.
ஒப்பந்த மீறல், நம்பிக்கைக்குரிய கடமையை மீறியது, இரகசியத்தை பாதுகாக்க தவறியது மற்றும் தனது தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு சட்டங்களை புறக்கணித்தது ஆகியவற்றுக்காக அவர் அந்த இழப்பீட்டை கோரியுள்ளார்.
எனினும், அந்த வழக்கு, தங்களை மிரட்டும் செயல் என, பிரின்ஸ் கோர்ட் மருத்துவமனை கூறியுள்ளது.
2016-ஆம் ஆண்டு, தமக்கு ஆலோசனை வழங்கவும், பிரச்சினையை கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் கிறிஸ்டின் லீஸ் ஒப்புதல் வழங்கியதாகவும், மருத்துவமனை நிர்ணயித்த அனைத்து விதிமுறைகளுக்கும், நிபந்தனைகளுக்கும் ஒப்புதல் அளித்ததாகவும், அதனால் அப்பெண் தொடுத்திருக்கும் வழக்கை செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் பிரின்ஸ் கோர்ட் மருத்துவமனை கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னதாக, பிரின்ஸ் கோர்ட் மருத்துவமனையின் அலட்சியப் போக்கால் தனது எட்டு வயது மகன் வாழ்நாள் முழுவதும் மாற்றுதிறனாளியாக வாழ நேர்ந்துள்ளதாக அப்பெண் வழக்கு தொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.