ஷா ஆலாம், ஏப்ரல் 6 – சிலாங்கூர் வலுவான மாநிலமாக மாற வேண்டுமெனில், அனைத்து இனங்களும் ஒன்றிணைந்து பொதுவான இலக்கை நோக்கி உழைக்க வேண்டும் என சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா கூறியுள்ளார்.
சிலாங்கூரில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க அனைத்து மலேசியர்களும் ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மக்களிடையே ஒற்றுமையின்மையும் பிரிவினையும் ஒரு தேசத்தின் முன்னேற்றத்திற்கும் சாதனைகளுக்கும் தடையாக இருக்கும் என்றார் அவர்.
எனவே, பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைக் கொண்ட உள்ளூர் மக்களை ஒன்றிணைப்பதில் அனைத்து அரசியல் தலைவர்களும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என சுல்தான் ஷாராஃபுடின் கேட்டுக் கொண்டார்.
மக்களிடையே பிளவை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளை எழுப்பி நிலைமையை மேலும் மோசமாக்குவதை எல்லோரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்த சிலாங்கூர் ஆட்சியாளர் அறிவுறுத்தினார்.
மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்கான சிறந்த அணுகுமுறைகளை அரசியல் தலைவர்கள் கண்டறிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
சமூக நல்லிணக்கத்தைப் பேண மக்கள் மத்தியில் பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலை வளர்ப்பதற்கு சமூக ஊடக தளங்களை விவேகத்துடன் பயன்படுத்தலாமே என்றும் சுல்தான் ஷாராஃபுடின் பரிந்துரைத்தார்.