கோலாலம்பூர், நவம்பர்-22 – வெளிநாடுகளுக்கான அண்மையப் பயணங்களின் போது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு கிடைத்த கௌரவம், மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா போன்ற ஒப்பற்றத் தலைவர்களுடன் ஒப்பிடப்பட்டதால், மக்களவையில் நேற்று பெரும் அமளி துமளி ஏற்பட்டது.
பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர், அன்வாரிடம் கூடுதல் கேள்வி எழுப்பிய போது பிரச்னைத் தொடங்கியது.
அரசு நிர்வாகத்தை சீர்திருத்தும் பிரதமரின் முயற்சிகளைப் பாராட்டிப் பேசிய ராயர், உலக அரங்கில் அவருக்குக் கிடைத்து வரும் மதிப்பும் மரியாதையும் காந்தியடிகள், மண்டேலாவுக்கு ஈடானவை எனக் கூறினார்.
அதை ஆட்சேபித்த எதிர்கட்சியினர், அன்வாருக்கு ராயர் வெண்சாமரம் வீசுவதாகவும், பேசாமல் அவரை அமைச்சராக்கி அழகு பார்க்கலாமே என்றும் கேலி செய்தனர்.
பதிலடி கொடுக்கும் வகையில், அதற்கு முதல் நாள் வெடித்த ‘மதிப்புற்குரிய குற்றவாளி’ விவகாரத்தை ராயர் மீண்டும் எழுப்ப, நிலைமை மோசமானது.
புதன் கிழமை பேசிய பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த உலு திரங்கானு மற்றும் மஸ்ஜிட் தானா நாடாளுமன்ற உறுப்பினர்கள், அன்வார் தம்மை தாமே ‘மதிப்பிற்குரிய கைதி’ என அழைத்துக் கொண்ட வீடியோ குறித்து விளக்கம் கேட்டனர்.
அப்போதே சலசலப்பு ஏற்பட்டதால், வியாழக்கிழமை பிரதமர் வரும் போது அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என சபாநாயகர் நிலைமையைக் கட்டுப்படுத்தினார்.
இந்நிலையில், அந்த ‘மதிப்புற்குரிய கைதி’ என்ற சொற்றொடர் பயன்பாட்டை எதிர்கட்சியினர் சர்ச்சையாக்குவதால், அது குறித்து பிரதமர் விளக்க வேண்டுமென, நேற்று அன்வாரிடம் ராயர் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சி MP-கள் அவரை பதில் சொல்ல வற்புறுத்திய நிலையில், வியட்நாம் தலைவர் புத்ராஜெயாவில் காத்திருப்பதால் அவரைக் காணச் செல்ல வேண்டுமெனக் கூறி மக்களவையிலிருந்து பிரதமர் வெளியேறினார்.