பெய்ரூட், நவம்பர்-28, இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையிலான போரில் இருப்பிடங்களை இழந்த பல்லாயிரக்கணக்கான லெபனானிய மக்கள், 13 மாதங்களுக்குப் பிறகு தத்தம் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
புதன்கிழமை தொடங்கி போர் நிறுத்தம் அமுலுக்கு வந்திருப்பதே அதற்குக் காரணம்.
வெடிகுண்டு, ஏவுகணை, துப்பாக்கிச் சூட்டு சத்தம் ஓய்ந்து இயல்பு வாழ்க்கைத் திரும்பியிருப்பதால், வாகனங்களில் செல்லும் மக்கள் ஹாரன் (horn) அடித்தும், சாலைகளில் பாட்டுப் பாடியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பேருந்துகளில் மெத்தைகள், போர்வைகள், துணி மூட்டைகளுடன் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
மாதக்கணக்கில் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் நேரில் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட நெகிழ்ச்சியான தருணங்களையும் பார்க்க முடிந்து.
இந்த 13 மாத காலத்தில் லெபனானிலிருந்து மட்டும் 900,000 பேர் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போர் நிறுத்த உடன்படிக்கையின் படி, இதுநாள் வரை ஹிஸ்புல்லா ஆதிக்கம் செலுத்தி வந்த தென் லெபனானில் அந்நாட்டு இராணுவத்தின் பிடி ஓங்குகிறது.
அதே சமயம், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளிலிருந்து படிப்படியாக 60 நாட்களுக்குள் தனது படைகளை அது திரும்பப் பெறும்.
அமெரிக்கா – பிரான்ஸ் கூட்டு முயற்சியில் இந்த போர் நிறுத்தம் சாத்தியமாகியுள்ளது.