
வாஷிங்டன், அக்டோபர்-5,
பாலஸ்தீன போராளி கும்பலான ஹமாஸ் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் எல்லா ஒப்பந்தங்களும் இரத்துச் செய்யப்படும் என, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
“அமைதித் திட்டத்தை முன்நகர்த்திச் செல்ல வாய்ப்பளிக்கும் வகையில் இஸ்ரேல் தற்காலிகமாக குண்டுவீச்சை நிறுத்தியுள்ளது பாராட்டத்தக்கது. ஆனால் ஹமாஸ் விரைவாகச் செயல்பட வேண்டும்; இல்லையெனில் விளைவுகள் கடுமையாக இருக்கும்” என தனது Truth Social சமூக ஊடகத்தில் அவர் பதிவிட்டார்.
“அமெரிக்கா தாமதத்தை சகிக்காது; காசா இனி அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது” என்றார் அவர்.
ஹமாஸ் சிறைபிடித்துள்ள பிணைக் கைதிகளின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, ட்ரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர் (Jared Kushner) மற்றும் அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்கோஃப் (Steve Witkoff) எகிப்துக்குச் சென்றுள்ள நிலையில், ட்ரம்ப் அவ்வெச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தான் முன் வைத்த 20-அம்ச காசா அமைதித் திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டது வரலாற்றுப்பூர்வ முன்னேற்றம் எனக் கூறி, இஸ்ரேல் குண்டுவீச்சை உடனே நிறுத்த வேண்டும் என ஒரு நாளுக்கு முன்னர் தான் ட்ரம்ப் கேட்டுக் கொண்டிருந்தார்.
மேலும், கட்டார், துருக்கி, சவூதி அரேபியா, ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகள் பேச்சுவார்த்தையில் செய்த உதவிக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் ஒரு வழியாக அமைதியை நிலைநாட்டப் போகிறோம் என்றும் ட்ரம்ப் பெருமிதம் தெரிவித்திருந்தார்.