
கோலாலம்பூர், மே-9-“தாய்மை என்பது இறைவனின் மிகச்சிறந்த படைப்பு” என ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அன்னையர்களுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஒரு குடும்பத்தின் அச்சாணியாக இருந்து, அந்த வீட்டையே நந்தவனமாக மாற்றுபவர் தாய் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
நம் இந்தியச் சமுதாயம் இன்று அடைந்துள்ள ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னணியில் ஒரு தாயின் கண்ணீரும், அயராத உழைப்பும், ஈடுஇணையற்ற அர்ப்பணிப்பும் ஒளிந்திருக்கிறது.
தங்கள் பிள்ளைகளைச் சிறந்த கல்விமான்களாகவும், நற்பண்பு மிக்கவர்களாகவும் உருவாக்கி, இந்த நாட்டுக்கே சிறந்த குடிமகன்களாகத் தருபவர்கள் அன்னையர்களே என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.
தன் உதிரத்தைச் சதையாக்கி, மூச்சை நமக்குக் கடத்தி, இந்த உலகைக் காட்டிய முதல் குரு அன்னை.
நாம் எட்டியுள்ள உயரங்களுக்குப் பின்னால், அவள் தியாகம் செய்த கோடிக்கணக்கான கனவுகள் உள்ளன.
உலகில் மொழி கடந்தும், இனம் கடந்தும் போற்றப்படும் ஒரே சக்தி ‘அம்மா’ எனும் பேரன்பு மட்டுமே.
இந்நிலையில், ம.இ.கா சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் அனைத்துத் தமிழ் அன்னையர்களையும் போற்றி வணங்குவதாகத் தெரிவித்த தான் ஸ்ரீ விக்னேஸ்வரன், அனைத்துத் தாய்மார்களுக்கும் தனது மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.



