ஷா ஆலாம், ஜூலை 15 – அல்லா எனும் வார்த்தை பதிக்கப்பட்ட காலுறை விற்பனை விவகாரத்தில், முஸ்லீம்களின் உணர்வுகளைப் புண்படுத்திய குற்றத்திற்காக, கேகே சூப்பர்மாட் மற்றும் சூப்பர் ஸ்டோர் குழுமத்திற்கும், Xin Jian Chang பொருள் விநியோக நிறுவனத்திற்கும், தலா அறுபதாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
அந்த வழக்கில் புதிய திருப்பம் இருப்பதாக, அரசாங்க தரப்பு வழக்கறிஞர் கூறியதை தொடர்ந்து, நீதிபதி அந்த தீர்ப்பை அறிவித்தார்.
முன்னதாக, அந்த இரு நிறுவனங்களுக்கும் எதிரான குற்றச்சாட்டை மீண்டும் வாசிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அந்த குற்றச்சாட்டை கேகே சூப்பர் மாட் மற்றும் சூப்பர் ஸ்டோர் நிறுவனத்தின் பிரதிநிதியான தீ கொக் ஹியாம் மற்றும் பொருள் விநியோக நிறுவனத்தின் இயக்குனர் சோ ஹுய் சான் ஆகியோர் ஒப்புக் கொண்டதை அடுத்து, அவர்களுக்கு அந்த அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வேளையில், அல்லா எனும் வார்த்தை பதிக்கப்பட்ட காலுறை விற்பனை விவகாரத்தில், முஸ்லீம்களின் உணர்வுகளைப் புண்படுத்திய குற்றச்சாட்டிலிருந்து, கேகே சூப்பர்மாட் மற்றும் சூப்பர் ஸ்டோர் குழுமத்தின் தோற்றுனர் டத்தோ ஸ்ரீ டாக்டர் கேகே சாய்யையும் (Datuk Seri Dr KK Chai), அவரது மனைவியையும், விடுவித்து கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
அதே போல, Xin Juan Chang விநியோக நிறுவனத்தின் மூன்று இயக்குனர்களும், அந்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
மார்ச் 13-ஆம் தேதி, மாலை மணி 6.30 வாக்கில், பண்டார் சன்வேயிலுள்ள, கேகே சூப்பர்மாட் மற்றும் சூப்பர் ஸ்டோர் கடை ஒன்றில் அவர்கள் அக்குற்றத்தை புரிந்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.