
குவாந்தான், மார்ச்-3-அல் குர்ஆனை காலால் மிதித்து அவமதித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 21 வயது இளைஞர், இஸ்லாத்தைத் தழுவியர் என்ற தகவல் எதுவும் அவரின் தந்தைக்குத் தெரியாதாம்.
விக்னேஸ்வரன் கடந்தாண்டு ஏப்ரலில் இஸ்லாத்தைத் தழுவியதாக, பிரபல சுயேட்சை சமய சொற்பொழிவாளர் ஃபிர்டாவுஸ் வோங் முன்னதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
எனினும், மாணவரின் தந்தையான செல்வநாதன் அது பற்றி எந்த தகவலையும் அறியவில்லை என, விக்னேஸ்வரனின் வழக்கறிஞர் Muhammad Amirull Afiqq Mohamad Lokman தெரிவித்தார்.
இதற்கிடையில், அம்மாணவர் பஹாங்கில் இஸ்லாத்தைத் தழுவியதற்கான எந்தச் சான்றும் இல்லை என, மாநில இஸ்லாம் மற்றும் மலாய் பழக்கவழக்க மன்றமான MUIP உறுதிப்படுத்தியுள்ளது.
சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில மத அதிகாரிகளுடன் சரிபார்த்த போதும் எந்தப் பதிவும் கிடைக்கவில்லை என MUIP கூறிற்று.
இதையடுத்து, ஃபிர்டாவுஸ் வோங்கிடமே விளக்கம் கேட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை பதில் பெறப்படவில்லை எனவும் அம்மன்றம் கூறியது.



