Latest

ஆடம்பர அடுக்ககத்தின் 17 ஆவது மாடி வீட்டில் இணைய மோசடிக் கும்பல் -சீனப் பிரஜைகள் 9 பேர் கைது

கோலாலம்பூர், ஜூன்-25-கோலாலம்பூரின் வாங்சா மாஜு பகுதியில் உள்ள ஆடம்பர அடுக்ககத்தின் 17 ஆவது மாடியிலுள்ள ஒரு வீட்டில் , போலியான இணையவழி முதலீட்டுத் திட்டங்களை வழங்கும் அழைப்பு மையம் செயல்பட்டு வந்ததைக் கண்டறிந்த போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் அப்பகுதியில் சேகரிக்கப்பட்ட உளவுத் தகவல்களின் அடிப்படையில், கோலாலம்பூர் போலீஸ் துறையின் சிறப்பு அதிரடிப்படை காலை 11 மணியளவில் நடத்திய இந்தச் சோதனையில் சீனாவைச் சேர்ந்த ஒன்பது ஆடவர்கள் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் பாடில் மார்சஸ் Datuk Fadil Marsus தெரிவித்தார்.

அழைப்பு மையமாகப் பயன்படுத்தப்பட்ட அந்த வீட்டின் ஒரு அறையில் மடிக்கணினிகள் மற்றும் கைதொலைபேசிகள் போன்ற உபகரணங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

30 வயது மதிக்கத்தக்க அந்த சீனப் பிரஜைகள் அனைவரும், சீனாவில் உள்ளவர்களைக் குறிவைத்து கடந்த மே மாதத்திலிருந்து அந்நியச் செலாவணி முதலீட்டு மோசடி திட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அந்த வீட்டை வாடகைக்கு விட்ட உரிமையாளர் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைவதை ஒருங்கிணைத்த முகவர் அல்லது பின்னணியாக செயல்பட்டவர்களை அடையாளம் காண்பதற்காக கோலாலம்பூர் வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறை தொடர்ந்து விசாரணையை மேற்கொள்ளும் என Fadil கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!