கோலாலம்பூர், நவ 25 – ஆண்களுக்கு எதிரான பாலியல் வன்செயல் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை எச்சரிக்கை அளவை எட்டியுள்ளதோடு அண்மையில் ஆண்கள் சம்பந்தப்பட்ட 1,000த்திற்கும் மேற்பட்ட பாலியல் தொந்தரவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி (Datuk Seri Nancy Shukri) தெரிவித்திருக்கிறார்.
இத்தகைய சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க பல ஆண்கள் இன்னும் முன்வரவில்லை என்றாலும், அண்மைய ஆண்டுகளில் ஆண்களுக்கு எதிரான வன்முறைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும் ஆண்களுக்கிடையே நடக்கும் பெரும்பாலான பாலியல் வன்முறை சம்பவங்கள் ஒரே பாலினத்தைச் சேர்ந்த நபர்களை உள்ளடக்கியது என்று Santubong நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன் இது தொடர்பாக 20 வழக்குகளுக்கு மேல் பதிவாகியதில்லை. ஆனால் சட்ட ஆலோசனை திட்டத்தைத் தொடர்ந்து அந்த எண்ணிக்கை 1,000 த்திற்கும் மேலாக அதிகரித்தது என்று அவர் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான அனைத்துலக தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது நன்சி சுட்டிக்காட்டினார்.