
காசிபுக்கா, நவம்பர்-2,
தென்னிந்திய மாநிலம் ஆந்திராவின் காசிபுக்காவில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஏகாதசி நாளில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 9 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில் 8 பெண்களும் ஒரு சிறுமியும் அடங்குவர்.
மேலும் 17 பேர் காயமடைந்தனர்.
சம்பவத்தின் போது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூஜைக்காக ஒரே குறுகிய படிக்கட்டுப் பாதையில் நுழைய முற்பட்டனர்; இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிலர் கீழே விழுந்து மிதிபட்டதாகக் கூறப்படுகிறது.
அந்தத் தனியார் கோவில் இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படாத நிலையில் ஒரே ஒரு நுழைவு மற்றும் வெளியேறும் வழி மட்டுமே இருக்கிறது.
இதுவே விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தோருக்கு 50,000 ரூபாய் நிவாரணத் தொகையும் அறிவித்துள்ளார்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான மாநில அரசும் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மீட்புப்பணிகளும் மருத்துவ உதவிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.



