புத்ராஜெயா, ஜூலை 3 – கடந்தாண்டு அக்டோபர் முதலாம் தேதி தொடங்கி, இவ்வாண்டு மே 31-ஆம் தேதி வரை, ஆன்லைனில் அரிசி விற்பனை தொடர்பான, மொத்தம் 94 விளம்பரங்கள், மின்னியல் வர்த்தக தளங்களின் நடத்துனர்களால் அகற்றப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட ஆன்லைன் அரிசி விற்பனையாளர்கள், நெல் மற்றும் அரிசி ஒழுங்குமுறை வாரியத்தின், சில்லறை விற்பனை உரிமத்தை பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளதாக, விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
அதோடு, அந்த அரிசி சட்டவிரோதமாக நாட்டிற்குள் தருவிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
நெல் மற்றும் அரிசி கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகும்.
கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு பரிவர்த்தனைக்கும், நெல் மற்றும் அரிசி ஒழுங்குமுறை வாரிய தலைமை இயக்குனரால் வெளியிடப்படும் உரிமத்தை பெற்றிருக்க வேண்டும். ஆன்லைன் உட்பட தொழிற்சாலை, மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனைக்கும் அது பொருந்தும்.
ஆன்லைன் அரிசி விற்பனையை நெல் மற்றும் அரிசி ஒழுங்குமுறை வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
அதனால், ஆன்லைன் விற்பனையாளர்கள், நடப்பு சட்ட திட்டங்களை பின்பற்றி நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 25 ஆயிரம் ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது ஐந்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.