ஜோகூர் பாரு, ஜூலை 5 – ஜோகூர் பாருவில், சமூக ஊடகம் வாயிலாக அறிமுகமான பணம் கொடுக்கும் நிறுவனத்திடமிருந்து இரண்டு லட்சம் ரிங்கிட்டை கடனாக பெற விண்ணப்பித்த, சலூன் உரிமையாளர் ஒருவரின் முயற்சி தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், இறுதியில் அவர் தனது ஒரு லட்சத்து 46 ஆயிரம் ரிங்கிட் சேமிப்பையும் இழக்க நேர்ந்தது.
அச்சம்பவம் தொடர்பில், நேற்று அந்த 28 வயது பெண் உரிமையாளரிடமிருந்து புகார் கிடைத்ததை, ஜோகூர் பாரு செலாத்தான் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ரவுப் செலாமாட் (Raub Selamat) உறுதிப்படுத்தினார்.
கடந்த வாரம் சமூக ஊடகத்தில் செய்யப்பட்ட விளம்பரத்தை பார்த்த அப்பெண், அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைப்பேசி எண்ணை தொடர்புக் கொண்டுள்ளார்.
அதன் வாயிலாக, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பணியாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர், கடனுதவிக்கு விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள் குறித்து அப்பெண்ணுக்கு விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர், தனது அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை அப்பெண் ஒப்படைத்துள்ளார்.
அதோடு, முத்திரை மற்றும் இதர கட்டணமாக, ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 20 ரிங்கிட்டை, அந்நபர் வழங்கிய ஆறு வெவ்வேறு வங்கி கணக்குகளில் அப்பெண் செலுத்தியுள்ளார்.
அதன் பின்னரும், அந்நபர் அப்பெண்ணிடமிருந்து கூடுதல் பணம் கேட்கவே, தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர் போலீஸ் புகார் செய்ததாக கூறப்படுகிறது.
இதுவரை அவருக்கு கடன் தொகை எதுவும் கிடைக்கவில்லை.