கோலாலம்பூர், ஜூலை 18 – இணைய பகடிவதை குற்றவாளிகளுக்கு அபராதம் விதித்தால் மட்டும் போதாது. மாறாக, அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டுமென, இணைய மிரட்டல் காரணமாக அண்மையில் தற்கொலை செய்துக் கொண்ட சமூக ஊடக பிரபலம் ராஜேஸ்வரி அப்பாஹு என்ற ஏஷாவின் தாயார் தெரிவித்தார்.
ஏஷாவை பகடிவதை செய்த குற்றத்தை ஒப்புக் கொண்ட பொதுநல பணியாளர் ஒருவருக்கு, கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த 16 ஜூலை வெறும் நூறு ரிங்கிட்டை அபராதமாக விதித்ததை அடுத்து, ஏஷாவின் தாயார் அவ்வாறு கூறியுள்ளார்.
அந்த தண்டனை குறித்து, புஷ்பா எனும் அம்மாது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறிய போது, குற்றம்சாட்டப்பட்ட பி.ஷாலினி எனும் அப்பெண் சிரித்துக் கொண்டே சென்றது தம்மை மனமுடையச் செய்ததாகவும், புஷ்பா சுட்டிக்காட்டினார்.
அதோடு, ஷாலினிக்கு விதிக்கப்பட்ட சிறிய அபராதம், இணைய பகடிவதை புரிபவர்கள் எளிதாக தப்பித்துக் கொள்ளலாம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் புஷ்பா சொன்னார்.
இணைய பகடிவதை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது தனது நோக்கமல்ல என கூறிய புஷ்பா, அவர்களுக்கு குறைந்தது ஐந்தாண்டுகளாவது சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றார்.
முன்னதாக, ஏஷா பகடிவதை குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட 35 வயது ஷாலினிக்கு, மாஜிஸ்திரேட் எஸ்.அருட்ஜோதி, அதிகபட்சமாக நூறு ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது, கடும் கண்டத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது