கோலாலம்பூர், ஜூலை 28 – இணைய மோசடிகள், இணைய பகடிவதை மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்களை தடுப்பதற்கு அரசாங்கத்தின் இறுதி நடவடிக்கையாக சமூக ஊடகங்கள் தங்களது தளங்களுக்கு லைசென்ஸ் அல்லது உரிமம் எடுக்கவேண்டும் என்ற புதிய விதிமுறை ஆகஸ்டு 1ஆம்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து இந்த நடைமுறை ஆக்கப்பூர்வமாக அமல்மல்படுத்தப்படும் என MCMC எனப்படும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. லைசென்ஸ் இல்லாமல் சமூக ஊடகங்கள் தங்களது இணைய தளங்களை குறுஞ்செய்தி சேவைக்கு பயன்படுத்தினால் அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டு காலமாக இணைய மோசடிகள், பகடி வதைகள், மற்றும் இணைய குற்றச்செயல்களை சமூக வலைத்தளங்களில் தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட செயல் திட்டங்கள் தோல்வி கண்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லைசென்ஸ் எடுக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையினால் மலேசியாவிலுள்ள குறைந்தது 8 மில்லியன் பதிவு பெற்ற பயணர்களைக் கொண்ட அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் குறுச் செய்தி தளங்கள் 1998 ஆம் ஆண்டின் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழ் சேவை வசதிக்கான லைசென்ஸிற்கு விண்ணப்பிக்க வேண்டும். அமலாக்க காலத்திற்கு பிறகு லைசென்ஸ் பெறாத சமூக ஊடகங்கள் சட்டவிரோதமாக செயல்படுவதாக பொருள்படும் என்பதோடு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் தெரிவித்துள்ளது.