சிரம்பான் , ஜூலை 6 – சாலையின் விதிமுறையை மீறி ஒரே திசையில் எதிர் தடத்தில் லோரி ஓட்டுனர் சென்ற 51 வினாடிகளைக் கொண்ட காணொளி வைரலானது.
சிரம்பான் 2-இல் Jalan Persiaran 2/3 சாலையில் நடந்த இந்த சம்பவம் குறித்த காணொளி இரவு மணி 7.40 அளவில் சமூக வலைத்தளத்தில் வைரலானதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் ஹட்டா சே டின் (Mohamad Hatta Che Din ) தெரிவித்தார்.
நேற்று காலை மணி 11.39 அளவில் இச்சம்பவம் நடந்ததை தொடர்ந்து அந்த லோரி ஓட்டுனரைச் சிரம்பான் மாவட்ட போக்குவரத்து அமலாக்க மற்றும் குற்றவியல் பிரிவு அடையாளம் கண்டதாக அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட 51 வயது லோரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டதோடு அந்த லோரியும் சிராம்பான் மாவட்ட போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சிரம்பான் வட்டாரத்திற்கு சரக்கை ஏற்றிச் சென்ற அந்த லோரி ஓட்டுனர் அந்த வழியில் தனது வாகனம் செல்லமுடியாத என்பதை உணரவில்லை.
GPS எனப்படும் சாலை வழிகாட்டும் முறையை பின்பற்றிச் சென்றதால் தாம் எதிர் திசைக்குள் நுழைந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து 1987 ஆம் ஆண்டின் போக்குவரத்து சட்டத்தின் 42ஆவது விதி உட்பிரிவின் (1) இன் கீழ் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக முகமட் ஹட்டா தெரிவித்தார்.