
புத்ராஜெயா, மார்ச்-29-இந்திய முஸ்லீம் உணவகங்களின் செலவின அதிகரிப்பு குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில், மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கமான PRESMA-வை அரசாங்கம் அழைத்து விளக்கம் கேட்கவுள்ளது.
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN-னின் துணையமைச்சர் டத்தோ Dr Fuziah Salleh அதனைத் தெரிவித்தார்.
உணவகச் செயல்பாட்டு செலவுகள் 10 முதல் 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக PRESMA முன்னதாகக் கூறியிருந்தது.
இந்த அதிகரிப்புக்கு மூலப்பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்து செலவுகள் மற்றும் பிற செயல்பாட்டு செலவுகளே காரணம் என்றும், சமாளிக்க முடியாத பட்சத்தில் உணவுப் பொருட்களின் விலைகளில் சிறிய உயர்வை தவிக்க முடியாது என்றும் அச்சங்கம் தெரிவித்தது.
இந்நிலையில், விலையேற்றம் நியாயமானதா என்பதையும், பொது மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுத்தப்படாததையும் உறுதிச் செய்ய அரசு விரும்புகிறது.
எனவே, எந்தவொரு விலை உயர்வும் சரியான ஆதாரங்களுடன் இருக்க வேண்டும் என Fuziah சொன்னார்.
அவ்வகையில், KPDN அதிகாரிகள் விரைவிலேயே PRESMA நிர்வாகத்தை அழைத்து, செலவின உயர்வை தக்க ஆதாரங்கள் மற்றும் தரவுகளுடன் நிரூபிக்குமாறு கேட்பர் என்றார் அவர்.
விநியோகச் சங்கிலியில் பாதிப்பு, உலகலாவியத் தாக்கம் உட்பட உணவக நடத்துநர்கள் எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் அவர்களுடன் ஒத்துழைக்கும்.
ஆனால், அதற்காக எந்தவொரு விலையேற்றமும் கண்மூடித்தனமாக இருக்கக்கூடாது.
உணவுப் பொருட்களின் விலைகள் நியாயமாக இருப்பதை உறுதிச் செய்ய KPDN தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் அமுலாக்க நடவடிக்கைகளை எடுத்து வருமென துணையமைச்சர் சொன்னார்.



