தெற்கு சுலாவேசி, ஜூன்-9 – இந்தோனீசியாவின் தென் சுலாவேசியில் 3 நாட்களாகக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட பெண், ராட்சத மலைப்பாம்பின் வயிற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறு தோட்ட விவசாயியான 50 வயது Faridah, விளைச்சல் பொருட்களை தோட்டத்தில் விற்றுக் கொண்டிருக்கையில் காணாமல் போனதாக அவரின் கணவர் புகாரளித்திருந்தார்.
மனைவியைத் தேடி தோட்டத்திற்குச் சென்றவர், அங்கு சுமார் 7 மீட்டர் நீளத்தில் ஒரு மலைப்பாம்பு வயிற்றைத் தள்ளிக் கொண்டு கிடப்பதைக் கண்டார்.
மலைப்பாம்பின் வயிறும் உடலும் அளவுக்கதிகமாக பெருத்துப் போய் அது நகர முடியாமல் கிடந்தது கிராம மக்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அதை ஒருவழியாகப் பிடித்து வயிற்றைக் கிழித்துப் பார்த்ததில், சந்தேகப்பட்டது போலவே Faridah பாம்பின் வயிற்றில் சடலமாகக் கிடந்தார்.
மலைப்பாம்புகள் மனிதர்களை விழுங்கும் சம்பவங்கள் அரிதாக நடப்பதாகும்.
என்றாலும் இந்தோனீசியாவில் மலைப்பாம்புகளால் முழுமையாக விழுங்கப்பட்டு சிலர் மரணமடைந்த சம்பவங்கள் அண்மைய சில ஆண்டுகளில் பதிவுச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.