சிபு, மே 8 – இந்தோனேசியாவுக்கு 12 டன் Holland வெங்காயங்களை கடத்தும் முயற்சியை மலேசிய ராணுவத்தின் முதலாவது காலட் படைப் பிரிவு முறியடித்துள்ளதோடு இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 32 மற்றும் 53 வயதுடைய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். கூச்சிங்கிற்கு அருகே Bauவில் செம்பனை தோட்டம் ஒன்றில் ராணுவ வீரர்கள் இரவு மணி 9.30 அளவில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது அந்த வெங்காயங்களை ஏற்றியிருந்த இரண்டு லோரிகள் எல்லைப் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தபோது அவற்றை தடுத்து நிறுத்தினர்.
அந்த வெங்காயங்கள் மற்றும் 181,500 ரிங்கிட் மதிப்புடைய இரு லோரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு Bau போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக ராணுவ காலற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் விசாரணைக்காக Bau போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.