
கியோன்ஜார், ஏப் 28 -இந்தியாவில் ஒடிசாவின் கியோன்ஜார் (Keonjhar) மாவட்டத்தில், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர், தனது இறந்த சகோதரியின் பெயரில் வைக்கப்பட்டிருந்த பணத்தை எடுப்பதற்காக, அவரது எலும்புக்கூட்டை வங்கிக்குக் கொண்டு வந்ததாக போலீஸ்துறை தெரிவித்தது.
இந்தச் சம்பவம், ஒடிசா Grameen வங்கியின் Maliposi கிளையில் நிகழ்ந்துள்ளது. கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஜீது முண்டா (Jeetu Munda) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
56 வயதான தனது மூத்த சகோதரி இவ்வாண்டு ஜனவரி மாதம் 26ஆம்தேதி இறந்ததைத் தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கிலிருந்து 20,000 ரூபாயை எடுக்க அவர் முயன்றுள்ளார்.
தாம் பலமுறை வங்கிக்கு வந்ததாகவும் சகோதரியின் பெயரில் வைக்கப்பட்டிருந்த பணத்தை எடுக்க கணக்கு வைத்திருப்பவரை அழைத்து வருமாறு என்னிடம் வங்கி அதிகாரிகள் வற்புறுத்தினர்.
சகோதரி இறந்துவிட்டார் என தாம் பலமுறை கூறியபோதும், அவர்கள் அதை நம்பாமல் அவரை வங்கிக்கு அழைத்து வந்தால்தான் பணம் எடுக்க முடியும் என வலியுறுத்தினர்.
எனவே, விரக்தியின் காரணமாக, வேறு வழியின்றி குழி தோண்டி, சகோதரியின் மரணத்திற்கான ஆதாரமாக அவரது எலும்புக்கூட்டை வெளியே எடுத்து வந்துள்ளார்.
இதனிடையே அவர் படிப்பறிவில்லாத பழங்குடியின மனிதர். சட்டப்பூர்வ வாரிசு அல்லது நியமனதாரர் யார் என்பது அவருக்குத் தெரியாது.
இறந்தவரின் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான நடைமுறையை அவருக்குப் புரியவைப்பதில் வங்கி அதிகாரிகள் தவறிவிட்டனர் என தகவல் அறிந்து வங்கிக்கு வந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இருப்பினும், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அவரின் இறந்த சகோதரியின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க உதவுவதாகக் போலீஸ் அவருக்கு உறுதியளித்தது.
பின்னர், போலீஸ் முன்னிலையில் அந்த எலும்புக்கூடு மீண்டும் மயானத்தில் புதைக்கப்பட்டது.



