புத்ராஜெயா, ஜூன் 11 – இலக்கிடப்பட்ட மானிய திட்டத்தின் வாயிலாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள சிக்கன நடவடிக்கை, அமைச்சர்களின் செலவுப்படி தொகையை அதிகரிக்கவோ அல்லது பிற தேவைகளுக்கோ அல்ல.
மாறாக, உரிமையுள்ள, உதவி தேவைப்படுவோருக்கு திரும்ப தருவதே அதன் உண்மை நோக்கமாகும் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் (Datuk Seri Anwar Ibrahim) தெளிவுப்படுத்தியுள்ளார்.
அண்மையில் அமல்படுத்தப்பட்ட, மின்சார மானியம் மறுசீரமைப்பு, கோழி இறைச்சி விலையை மிதவை முறையில் நிர்ணயித்தது மற்றும் ஆகக் கடைசியாக இலக்கிடப்பட்ட டீசல் மானியம் ஆகியவை, ஆண்டுதோறும் அரசாங்க செலவினங்களில் இருந்து, சுமார் ஆயிரம் கோடி ரிங்கிட்டை மிஞ்சப்படுத்த அல்லது சேமிக்க உதவும் என்பதை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, மின்சார மானிய மறுசீரமைப்பு திட்டம் மூலம், 450 கோடி ரிங்கிட்டை சேமிக்க முடியும்.
எனினும், அது 85 விழுக்காட்டு மக்களை உட்படுத்தி இருக்கவில்லை. வெளிநாட்டினர் உட்பட 15 விழுக்காட்டினர் மட்டுமே பாதிக்கப்பட்டதால், அது சர்ச்சையை ஏற்படுத்தவில்லை.
கோழி இறைச்சி விலையை மிதவை முறையில் நிர்ணயிக்கும் திட்டத்தால், ஆண்டுக்கு ஆயிரத்து 200 கோடி ரிங்கிட் உதவித் தொகையை அரசாங்கத்தால் சேமிக்க முடிந்துள்ளது. அதனால், கோழி விலையும் ஏற்றம் காணவில்லை.
நிலையான அரசியல் சூழலே அதற்கு காரணம் என, நிதி அமைச்சின் மாதந்திர கூட்டத்தில் உரையாற்றிய போது அன்வார் தெரிவித்தார்.
அதே போல, இலக்கிடப்பட்ட டீசல் உதவித் திட்டத்தின் வாயிலாக, 400 கோடி ரிங்கிட்டை சேமிக்க முடியும். அதனை கொண்டு நாட்டின் பொது போக்குவரத்து சேவைகளை தரம் உயர்ந்த முடியும் என்பதோடு, மக்களுக்கான STR உதவித் தொகை திட்டத்தையும் அதிகரிக்க முடியும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.