
கோலாலம்பூர், ஆகஸ்ட்-11-மாரடைப்பு என்றாலே வயதானவர்களுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்னை என்ற எண்ணம் பலரிடையே உள்ளது. ஆனால், அந்த எண்ணத்தை மாற்ற வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், மலேசியர்கள் சுமார் 10 ஆண்டுகள் முன்னதாகவே மாரடைப்புக்கு ஆளாவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக இளம் வயதினரிடையே இதய நோய் அபாயம் அதிகரிப்பதற்கு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, புகைப்பிடித்தல், அதிக உடல் எடை, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு உள்ளிட்ட காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், தங்களுக்கு இதய நோய் அபாயம் இருப்பதையே பலர் அறியாமல் இருப்பதுதான். உடலில் பெரிய அறிகுறிகள் எதுவும் இல்லாததால் தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக நினைப்பதும் ஆபத்தை அதிகரிக்கலாம்.
மார்பில் அழுத்தம் அல்லது வலி, மூச்சுத் திணறல், அதிக வியர்வை, குமட்டல் அல்லது கை, தோள்பட்டை, தாடைப் பகுதிகளுக்கு பரவும் வலி போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியமாகும்.
அதேவேளை, மாரடைப்பு ஏற்பட்ட பிறகு சிகிச்சை பெறுவதைவிட, இளம் வயதிலிருந்தே ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளைப் பரிசோதித்து, வாழ்க்கை முறையில் மாற்றங்களை மேற்கொள்வதே சிறந்த பாதுகாப்பு என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.



