ஈப்போ, ஆக 5 – கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் திறன் பயிற்சி, வர்த்தக கடனுதவி, விளையாட்டுத்துறை போன்றவற்றில் இந்திய இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் “என் சமூகம் என் கடமை “என்ற பொது புகார் பிரிவை பேரா ம.இ.கா இளைஞர் பிரிவு அமைத்துள்ளது. இந்திய இளைஞர்களுக்கு ஆக்கப்பூர்வமாக உதவி வழங்கும் வகையில் இந்த பொது புகார் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பேரா ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைவர் தியாகேஸ் கணேசன் தெரிவித்தார்.
பேரா மாநில இளைஞர் பிரிவின் மாநாட்டில் முன்று முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மாநில இளைஞர் பிரிவின் துணைத்தலைவர் அர்விந்த் அப்பளசாமி தெரிவித்தார். அண்மையில் பகடி வதை தொடர்பாக இந்திய இளம் பெண் ஒருவர் மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்தோடு இது போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானமும் இவற்றில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே பேரா மாநில இளைஞர் பிரிவின் 35ஆவது மாநாட்டை மாநில ம.இ.காவின் தலைவர் டத்தோ இளங்கோ வடிவேலு அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். கட்சியில் மேலும் அதிகமான இளைஞர்கள் இணைவதற்கு நல்லதொரு தொடக்கமாக இந்த பொது புகார் பிரிவு அமையும் என அந்த பிரிவை தொடக்கிவைத்து பேசியபோது இளங்கோ தெரிவித்தார்.
ம.இ.கா அரசாங்கத்தில் இடம்பெறாவிட்டாலும் கட்சியை வலுப்படுத்தவும் இந்திய சமூகத்தினருக்கு தேவையான உதவிகள் சென்றடைவதற்கும் ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவரது கரத்தை வலுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் தொடர்ந்து பாடுபடுவோம் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஈப்போ டவர் ரீஜன்சி ஹோட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் அதிகாமான இளைஞர்கள் கலந்து கொண்டது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு நாம் அனைவரும் இணைந்து குரல் கொடுப்போம் என அர்விந்த கிருஷ்ணன் அறைகூவல் விடுத்தார்.