கோலா சிலாங்கூர், ஜூலை 11 – இஸ்ரேலிய ஆடவனுக்கு துப்பாக்கிகளை விநியோகித்ததாக நம்பப்படும், தம்பதி செய்திருக்கும் ஜாமின் மனு மீதான விசாரணை, ஜூலை 25-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.
அதே நாளில், குற்றம்சாட்டப்பட்ட 41 வயது ஷரிப்பா பராஹா சையிட் ஹுசைன் (Sharifah Faraha Sued Husin) மற்றும் 43 வயது அப்துல் அஜிம் முஹமட் யாசின் (Abdul Azim Mohd Yasin) ஆகிய இருவரையும் பிரதிநிதிக்கும் வழக்கறிஞரும், அரசாங்க தரப்பு வழக்கறிஞரும் தங்கள் வாதங்களை முன் வைக்க வேண்டுமென, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, ஷரிபாவை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர், 1971-ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தை உட்படுத்தி இருக்கும் சில வழக்குகள் அடிப்படையில், ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதே சமயம், அப்துல் அஜிமும், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
எனினும், அவ்விருவரும் எதிர்நோக்கி இருக்கும் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, அந்த ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டுமென, அரசாங்க தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்.