கோலாலம்பூர், ஏப்ரல் 4 – தலைநகர், ஜாலான் அம்பாங்கில், கடந்த வாரம், இஸ்ரேலிய ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், விசாரணைக்கு உதவும் பொருட்டு மேலும் நால்வரை அரச மலேசிய போலீஸ் படை கைதுச் செய்துள்ளது.
அதனை உறுதிப்படுத்திய தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸாருடின், ஜோகூர், ஸ்கூடாய், கெலாங் பாத்தா ஆகிய பகுதிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனைகளில், பெண் ஒருவர் உட்பட அந்நால்வரும் கைதுச் செய்யப்பட்டதாக சொன்னார்.
அந்நால்வரும், 28 வயதுக்கும் 41 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.
அதனை தொடர்ந்து, தலைநகர், ஜாலான் அம்பாங்கிலுள்ள, தங்கும் விடுதி ஒன்றிலிருந்து, மார்ச் 27-ஆம் தேதி, 38 வயது இஸ்ரேலிய ஆடவன் கைதுச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை கைதானவர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளதாக, ரஸாருடின் தெரிவித்தார்.
இவ்வேளையில், அந்த இஸ்ரேலிய ஆடவனுக்கு ஆறு துப்பாக்கிகளை விநியோகித்தது தொடர்பில் கைதான உள்நாட்டு ஜோடி தொடர்பில் வினவப்பட்ட போது, நாளையுடன் அவர்களின் ஏழு நாள் தடுப்பு காவல் நிறைவடையும் வேளை ; அதனை நீட்டிக்க நீதிமன்றத்திடம் மனு செய்யப்படுமென ரஸாருடின் சொன்னார்.
முன்னதாக, குவாலா சிலாங்கூரிலுள்ள, ரமலான் சந்தையிலிருந்து அவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
அண்டை நாட்டிலிருந்து துப்பாக்கிகளை பெற்ற அவர்கள், கிரிப்டோ கரன்சியை பயன்படுத்தி, கைதான இஸ்ரேலிய ஆடவனுக்கு விற்றதாக சந்தேகிக்கப்படுகிறது.