கோலாலம்பூர், ஏப் 24 – இஸ்ரேலுக்கு உளவு பார்த்த Sahalom Avitan னுடன் தொடர்புடைய கைது செய்யப்பட்ட 10 தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்படுமா என்பது குறித்து அடுத்த மாதம் முடிவு தெரியும் என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ Rusdi Mohd Isa தெரிவித்தார். மூன்று வெளிநாட்டினர் உட்பட 10 சந்தேகப் பேர்வழிகள் மீதான விசாரணையை பொறுத்துத்தான் எந்தவொரு முடிவும் எடுக்கப்படும் என அவர் கூறினார். அனைத்து சந்தேகப் பேர்வழிகளும் தற்போது சொஸ்மா எனப்படும் சிறப்பு நடவடிக்கைக்கான பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டைச் சேர்ந்த 7 சந்தேகப் பேர்வழிக்கான தடுப்புக் காவல் மே 14ஆம்தேதி முடிவுடையும வேளையில் வெளிநாட்டினருக்கான தடுப்புக் காவல் மே 15ஆம்தேதி முடிவடைவதாக Rusdi தெரிவித்தார்.
அவர்களை குற்றஞ்சாட்டுவதா? விடுதலை செய்வதா அல்லது சொஸ்மா சட்டத்தின் கீழ் தொடர்ந்து தடுத்துவைப்பதா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டிய விதிமுறை இருப்பதாக செராஸ் மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார். கைதான வெளிநாட்டினரில் ஒருவன் அமெரிக்க கடப்பிதழை பயன்படுத்தி சுற்றுப்பயணியாக நாட்டிற்கு வந்துள்ளான். நாங்கள் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இஸ்ரேல் சந்தேகப் பேர்வழியுடன் தொடர்புள்ள 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மூவர் Shalom Avitan மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த திருமணமான தம்பதியர் மீது குற்றஞ்சாட்டப்பட்டதோடு இதர ஐவர் விடுதலை செய்யப்பட்டதாக Rusdi தெரிவித்தார்.