
ஈப்போ, ஏப்ரல்-7-ஈப்போ, கம்போங் கெப்பாயாங்கில் சட்டவிரோதமாக மின்சாதனக் கழிவுகளை (e-waste) கையாண்டு வந்த ஒரு தொழிற்சாலையில் அதிகாரிகள் சோதனை நடத்தி, சுமார் RM18 மில்லியன் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இச்சோதனையில், 200,000 கிலோ கிராம் அளவிலான மின்சாதனக் கழிவுகள், நூற்றுக்கணக்கான பைகள் மற்றும் பல்வேறு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த தொழிற்சாலை 4 ஆண்டுகளாக அனுமதியின்றி செயல்பட்டு வந்ததாகவும், சுற்றுச்சூழலுக்கும் பொது மக்களின் ஆரோக்கியத்திற்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்ததாகவும் போலீஸார் கூறினர்.
சோதனையில், 13 உள்நாட்டினர் உட்பட 26 பேர் விசாரணைக்காக கைதுச் செய்யப்பட்டனர்.
வெளிநாடுகளிலிருந்து கச்சா பொருட்களை வரவழைத்து, இந்தத் தொழிற்சாலையில் உடைத்து, தனித்தனியாகப் பிரித்து வேறு தொழிற்சாலைகளுக்கு அனுப்புவதே இவர்களின் வேலை.
இதில் தொடர்புடைய மேலும் சிலரைக் கண்டறிய மேல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சட்டவிரோத மின் சாதனக் கழிவு நடவடிக்கைகளை ஒழிக்க அரசாங்கம் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து மக்கள் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என்றும் போலீஸ் கூறியது.



