
வாஷிங்டன், ஜூலை.08 – ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடக்கியிருக்கிறது. ஹோர்முஸ் நீரிணையில் மூன்று வர்த்தகக் கப்பல்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் கூறியிருக்கிறது. அச்சூழ்நிலை மத்தியக் கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளை உலுக்கியிருக்கிறது. குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், வர்த்தகக் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் பெரும் இழப்பு ஏற்படும் என்றும் அமெரிக்கா சுட்டிக் காட்டியது.
இதனிடையே இரு தரப்பினருக்கும் இடையில் ஒப்புக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா மீண்டும் மீண்டும் மீறுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அது எச்சரித்தது.
ஈரானிய எண்ணெய்க்கான தற்காலிகத் தடை விலக்கை வாஷிங்டன் ரத்து செய்த சிறிது நேரத்திலேயே அத்தாக்குதல் நிகழ்ந்தது. அமெரிக்க கருவூலத் துறை, ஆகஸ்ட் 21 வரை கச்சா எண்ணெய் மற்றும் அது தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்கவும், அனுப்பவும் ஈரானுக்கு அனுமதி அளித்து, ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்தது.
அடையாளம் தெரியாத எறிபொருள் ஒன்று ஒரு எண்ணெய்க் கப்பலைத் தாக்கியதில் தீ ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து மேலும் இரு கப்பல்கள் தாக்கப்பட்டதாகவும், முன்னதாக பிரிட்டனின் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு கூறியது. தனது கடற்கரையை உள்ளடக்கிய ஒரு தற்காலிக போக்குவரத்து வழித்தடத்தை முன்மொழிந்து வரும் ஓமானுக்கு அருகே அந்த மூன்று கப்பல்களும் தாக்கப்பட்டன.



