
வயநாடு, ஜூலை.08- கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர். இரு மாவட்டங்களை இணைக்கும் சுரங்கப்பாதை சாலைத் திட்டப் பணிகள் நடைபெற்று வந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது. நிலச்சரிவு ஏற்பட்ட சமயம், கட்டுமானத் தொழிலாளர்கள் பலர் அங்கிருந்ததாகக் கூறப்படுகிறது.
தகவல் கிடைத்து மீட்புக் குழுக்கள் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படும் நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அச்சம்பவத்தில் காயமடைந்த பல தொழிலாளர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுள்ளனர்.
தொடர் கனமழையால், சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியைச் சுற்றியுள்ள மலைச் சரிவுகள் நிலை குலைந்து நிலச்சரிவு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. சேறும் கற்களும் சாலையில் அடித்துச் செல்லப்பட்டதால், பல வாகனங்களும் சேதமடைந்தன. இவ்வேளையில் அப்பேரிடரைத் தொடர்ந்து கேரள அரசு மீட்புப் பணிகள், நிவாரண மற்றும் உதவி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியிருக்கிறது.



