லக்னோவ், அக்டோபர்-1, இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இளம் பெண்ணின் தலையில் அறுவை சிகிச்சைக்கான ஊசி வைத்து தைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 வயது இளம்பெண், அக்கம் பக்கத்தாருடன் ஏற்பட்ட சண்டையில் தலையில் காயமடைந்து சமூக நல சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவரும் பணியாளர்களும் சேர்ந்து தையல் போட்டு, தலையில் கட்டுக் கட்டி அனுப்பி வைத்தனர்.
வீட்டுக்குத் திரும்பியவருக்கு தலையில் வலி அதிகரிக்கவே அவர் துடிதுடித்து போனார்.
இதனால் தனியார் மருத்துவமனையில் அப்பெண் அனுமதிக்கப்பட்ட போது தான் குடும்பத்தாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தலைக் காயத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உள்ளே ஊசி வைத்து தைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.
உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் ஊசி அகற்றப்பட்டது.
அரசு சுகாதார மையத்தில் மகளுக்கு தையல் போட்ட மருத்துவர் குடிபோதையில் இருந்ததாக அப்பெண்ணின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக இருவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
முழு அறிக்கைக் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுப்போம் என, மாவட்ட சுகாதார தலைமை அதிகாரி தெரிவித்தார்.