ஷா ஆலாம், ஜூலை-21 – உலகலாய அளவில் வெள்ளிக்கிழமை முதல் ஏற்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப (IT) கோளாறால், அரசுத் துறைகள் எதுவும் பாதிக்கப்படவில்லையென துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடிலா யூசோஃப் (Fadillah Yusof) உறுதிபடுத்தியுள்ளார்.
இதுவரை விமானப் போக்குவரத்துத் துறை மட்டுமே பாதிப்படைந்துள்ளது; அதுவும், ஆக்ககரமான நடவடிக்கைகளால் சீர் செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டில் அதுவொரு சவால்; அதனைத் தவிர்க்க இயலாது; அதனை எதிர்கொள்ள நாம் தான் தயாராக வேண்டுமென துணைப் பிரதமர் சொன்னார்.
வெள்ளிக்கிழமை உலகளவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், விமானச் சேவைகள், வங்கிச் சேவைகள், மருத்துவமனைகள், ஊடகங்கள் போன்றவை கடும் பாதிப்புக்குள்ளாகின.
குறிப்பாக ஆயிரக்கணக்கில் விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டன அல்லது ஒத்தி வைக்கப்பட்டன.
கணிணி பயன்பாடு செயலிழந்ததால், கைமுறையாக (manual) அலுவல்களை மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு விமான நிலையங்கள் தள்ளப்பட்டு, பயணிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர்.