கோலாலம்பூர், ஜூலை 20- விமான சேவைகள் உட்பட பல்வேறு வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதற்கு காரணமாக நேற்று ஏற்பட்ட உலகளாவிய நிலையில் தகவல் தொழிற்நுட்பம் செயல் இழந்தது குறித்து நிலைமையை அரசாங்கம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக டிஜிட்டல் எனப்படும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்திருக்கிறார்.
தகவல் தொழிற்நுட்பம் செயல் இழந்ததே இதற்கான காரணமே தவிர கணினி ஊடுருவல் தாக்குதல் எதுவும் கிடையாது என அவர் தெரிவித்தார்.
விரைவில் நிலைமை வழக்கத்திற்கு திரும்புவதற்கு அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு வருவதாக கோபிந்த் சிங் X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
தனது செயல்பாடுகளில் மைக்ரோசோப்டட் எதிர்நோக்கிய பாதிப்புக்களே தகவல் தொழிற்நுட்பம் செயல் இழந்ததாகவும், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக அவர் விவரித்தார்.
இதனிடையே இந்த பாதிப்பினால் மலேசிய விமான சேவைகள் எதுவும் பாதிக்கப்படவோ, விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்படவோ அல்லது விமான சேவைகளில் தாமதம் ஏற்படவில்லையென மலேசியாசிவில் விமான குழுமம் தெரிவித்தது.
அதே வேளையில் FireFly சேவையின் இணைய வாயிலாக விமான டிக்கெட் முன்பதிவு முறைகளில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பினாங்கு மற்றும் சபாவிலுள்ள விமான நிலையங்களும் விமான சேவைகளில் தடங்கலுக்கு உள்ளானதோடு விமான நிலைய முகப்பிடங்களில் பெரிய அளவில் பயணிகள் வரிசையாக நிற்பதை நேற்று காணமுடிந்ததாக பெர்னாமா தகவல் வெளியிட்டது.
நேற்று மாலை மணி 5.30 மணிவரை பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திலிருந்து 11 விமானங்கள் தாமதமாக புறப்பட்டதாக பினாங்கு சுற்றுலா மற்றும் பொருளாதார குழுவுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹான் வை (Wong Hon Wai) தெரிவித்தார்.