பிராட்டிஸ்லாவா, ஏப்ரல் 25 – உலகின் முதல் பறக்கும் கார், பயணி ஒருவருடன் வானில் வட்டமிட்டு, புதிய உலக சாதனையை பதிவுச் செய்துள்ளது.
ஏர்கார் (AirCar) என அழைப்படும் அக்கார், ஸ்லோவாக்கியா, ஜார்ரே பிஸ்டானி அனைத்துலக விமான நிலையத்தில் திரண்டிருந்த பார்வையாளர்கள் முன்னிலையில், இருமுறை அந்த அதிசயத்தை நிகழ்த்தி காட்டியது.
அந்த பறக்கும் காரில் பயணித்த முதல் நபர் எனும் பெருமையை, 75 வயதான புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஜீன்-மைக்கேல் ஜார் பெற்றுள்ளார்.
ஏர்காரை, ஸ்லோவாக்கியாவை தளமாகக் கொண்ட, க்ளீன்விஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஏர்காரால் சில நிமிடங்களில், சாதாரண காரில் இருந்து பறக்கும் காராக மாற முடியும்.
ஆயிரம் கிலோ கிராம் எடை கொண்ட ஏர்காரில், இரு இருக்கைகளுடன், ஒரு ஜோடி மடிப்பு இறக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஏர்கார் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் 300 மீட்டர் நீளம் கொண்ட ஓடுபாதை மட்டுமே போதுமானது.
ஈராயிரத்து 438 அடி உயரத்தில், மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றலை ஏர்கார் கொண்டுள்ளது.
இன்னும் ஓராண்டு காலத்தில் ஏர்கார் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படும் வேளை ; அதனை இயக்க ஒருவர் ஓட்டுநர் உரிமத்துடன், பைலட் உரிமத்தையும் வைத்திருக்க வேண்டும் என க்ளீன்விஷன் நிறுவனம் கூறியுள்ளது.