கோலாலம்பூர், நவ 21 – உலகின் சிறந்த நகரங்களின் தரவரிசையில் லண்டன் தொடர்ந்து 10 வது ஆண்டாக முதலிடத்தை தற்காத்துக் கொண்டதோடு தென்கிழக்காசிய நகரங்களில் கோலாலம்பூர் 50 ஆவது இடத்தைப் பெற்றது.
நியூயார்க், பாரிஸ் மற்றும் டோக்கியோவை பின்னுக்கு தள்ளி , பிரிட்டிஷ் தலைநகரான லண்டன் தொடர்ந்து உலகின் சிறந்த நகரமாக தேர்வு பெற்றது. சிங்கப்பூர் 5ஆவது இடத்தையும் பேங்காக் 32 இடத்தையும் பிடித்தன.
சொத்துடமை , சுற்றுலா மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் உலகளாவிய ஆலோசகரான ரெசோனன்ஸ்சு (Resonance ) மூலம் தரவரிசைகள் தொகுக்கப்பட்டன. இதுதவிர 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டு அளவுகோல்கள் மாறினாலும், தொடக்கத்திலிருந்து தரவரிசையில் லண்டன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
பலவகைப்பட்ட கலாச்சார பாரம்பரியம் , வலுவான வணிக உள்கட்டமைப்பு மற்றும் ஒப்பிடமுடியாத வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை இணைத்து லண்டனின் உலகளாவிய ஈர்ப்பை இந்த தரவரிசை எடுத்துக்காட்டுகிறது.
இந்த ஆண்டு தரவரிசையில், முன்னணி கருத்துக்கணிப்பாளர் Ipsos உடன் இணைந்து, முதன்முறையாக ஒரு முக்கிய மெட்ரிக் பொதுக் கருத்தையும் உள்ளடக்கியிருந்தது. 30 நாடுகளில் 22,000 க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து பகுப்பாய்வுக்கான தரவுகளும் சேர்க்கப்பட்டன.