
டோரோண்டோ, மே-30-இணையம் மூலமாக உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குத் தற்கொலை செய்வதற்கான நச்சு இரசாயனங்களை விற்று வந்த கனடா நாட்டைச் சேர்ந்த கென்னத் லாவ் (Kenneth Law) என்ற ஆடவர், நீதிமன்றத்தில் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.
இணையத் தளம் வாயிலாக இந்த நச்சு இரசாயனங்களை வாங்கி, பிரிட்டன் மற்றும் கனடா உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இவர் விற்பனை செய்துள்ளார்.
இந்த ஆபத்தான பொருட்கள் 150-க்கும் மேற்பட்ட இறப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பிரிட்டனில் மட்டுமே சுமார் 80-க்கும் மேற்பட்ட மரணங்களுக்கு இந்த 60 வயது விஷ வியாபாரியே காரணம் என அந்நாட்டுப் புலனாய்வுத் துறை அம்பலப்படுத்தியுள்ளது.
தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் அதற்குத் துணை போனது போன்ற பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளை அடுத்து, தன் மீதான 14 குற்றச்சாட்டுகளும் உண்மைதான் என நீதிமன்றத்தில் கென்னத் ஒப்புக்கொண்டுள்ளார்.
தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ள நிலையில், உலகையே உலுக்கிய இந்த இணைய விஷ விற்பனை வழக்கில், கென்னத்துக்கு மிகக் கடுமையான ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என அனைத்துலக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.



